லேக்கனாமிர்தம்
இது என் வலைப்பூ "லேக்கனாமிர்தம் ". பிள்ளையார் சுழி போடுகிறேன்
- மகாதேவன்
குரோதி வைகாசி 22 / 2024 ஜூன் 4
தெய்வப் புலவர் திருவள்ளுவர் குறள் வழியே அளித்துள்ள வளமான பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக சென்னை ராஜ் பவன் (தமிழக ஆளுநர் மாளிகை) திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம்) நன்னாளில் (மே 24 அன்று)திருவள்ளுவர் ஜெயந்தி விழா நடத்தியது. விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிகழ்த்திய இந்த உரை பேசுபொருளாகியது. ஆளுநரின் ஆங்கில உரையை தமிழாக்கி எடுத்தெழுதினேன். 2024 ஜூன் 7 தேதியிட்ட ‘விஜயபாரதம்’ வார இதழ் இதை அட்டைப்படக் கட்டுரையாக்கியது.
ஆளுநர் உரை
ஆளுநராக
அல்லாமல் திருவள்ளுவரின் சீடன் என்ற முறையில் இன்று சில கருத்துக்களை நான் (ஆர்.என். ரவி)
முன்வைக்கிறேன். திருவள்ளுவருடனும்
திருக்குறளுடனும் என் தொடர்பு ஆழமானது. இந்த
தொடர்பு ஏற்பட்டது பல பத்தாண்டுகளுக்கு முன்,
1964 ல் நான் உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்த போது. ஆங்கிலேய
ஆட்சியின் பின்விளைவாக தேசம்
மிக மோசமாக பின்னடைவு கண்டிருந்த நேரம் அது. நான் பிறந்து வளர்ந்த அந்த
கிராமத்தில் சாலை உள்பட எந்த வசதியும் கிடையாது. நானோ அந்த பின்தங்கிய சூழலில் இருந்து கொண்டு மனதில் ஒரு பேரார்வத்தை சுமந்து
கொண்டிருந்தேன்.
இந்த நிலையில் வசந்த பஞ்சமி
திருவிழா வந்தது அதுதான் எங்கள் பகுதியில் சரஸ்வதி பூஜை. பள்ளிக்கு விடுமுறை. அன்று
வகுப்புகள் கிடையாது. ஆனால்
பள்ளியில் பூஜை நடக்கும். பூஜை முடிந்த பிறகு பள்ளி நூலகத்திற்கு சென்றேன்.
ஊக்கமூட்டும் கதைகளை தேடிப் படிப்பது
என் பழக்கம். அந்த பிற்பகல் நேரத்தில் நான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில்
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்” என்று தென்
பாரதத்தின் தலைசிறந்த ஞானி திருவள்ளுவர் கூறியிருக்கிறார் என்ற வாக்கியம் கண்ணில்
பட்டது. முதன்முதலாக நான் படித்த குறள் அது தான்.
‘உன் இலக்கில் உறுதியாக இருந்தால் நீ அதை அடைந்தே தீருவாய்’ என்று அந்த குறள் எனக்கு ஊக்கம் தந்தது.
அதற்கு முன்னதாக, சின்னஞ்சிறு வயதில் எனக்கு பகவத்கீதை
பயின்றிருந்தேன். அநேகமாக
கீதையின் 700 செய்யுள்களையும்
மனப்பாடம் செய்துவிட்டேன். கடமையை செய், பலனை
எதிர்பாராதே என்ற பொருள் தரும் “கர்மண்யேவ அதிகாரஸ் தே மா பலேஷு கதாசன” எனும் கீதை வரியில் என்ன சொல்லப்பட்டது என்பதை அந்த
இளம் பருவத்தில் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் அன்று
“எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்” என்ற அந்த திருக்குறள் என் வாழ்வில்
பிரவேசித்ததும் எனக்கு ஏற்பட்ட மனோதிடம் அபாரம். இத்தனைக்கும் அப்போது எனக்கு அந்த
ஒரு குறள் மட்டுமே
தெரியும்; திருக்குறள்
என்ற நூலை நான் பார்த்ததில்லை, தென்பாரத
ஞானி என்பதைத் தவிர திருவள்ளுவர் பற்றி வேறு எதுவும் எனக்குத் தெரியாது.
![]() |
| தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி |
தமிழகம் வந்ததும் என் கையில்
கிடைத்த முதல் நூல்
திருக்குறள் தான். குறளைப் படிக்கப் படிக்க, கற்பனைக்கு
எட்டாத அளவில் ஒவ்வொரு முறையும் சிந்தனை விரிவடைகிறது. “கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த
குறள்” என்று
திருக்குறளைப் போற்றும்
கவிதை வரி கூறுகிறது. ஹிந்தியிலும்
‘கடலை குடத்துக்குள் அடைத்தது போல (காகர் மே சாகர்)’ என்ற பழமொழி உண்டு. குடம் பெரியது,
குறளோ சின்னஞ்சிறியது.
ஆனால் அதில் அவ்வளவு பொருள் செறிவு.
வாழ்வின் ஒவ்வொரு
கட்டத்திலும் தனிநபருக்கும் சரி, ஆட்சியாளருக்கும்
சரி, திருக்குறள் வழிகாட்டுகிறது.
அரசன் அனைத்துக்கும் மேம்பட்டவன் என்ற ஐரோப்பிய கருத்துக்கு மாறாக, பாரதிய தத்துவ ஞானத்துக்கு இசைவாக, அரசனுக்கு பல நெறிமுறைகளை விதிக்கிறது
திருக்குறள். மக்கள் வளவாழ்வு வாழ வகை செய்ய வேண்டியது அரசனின் கடமை என்று
கூறுகிறது. நட்பு நாடி அயலுறவு கொள்வது பற்றி எடுத்துரைக்கிறது. செய்யத்தக்கன
செய்யத் தகாதன என்று அரசனுக்கும் உண்டு என்று திருக்குறள் விதிக்கிறது. பசு தரும்
பால் அளவு குறைகிறது என்றாலோ புனித நூலை கற்றோர் மறந்தாலோ அரசன் சரியில்லை என்று
அர்த்தம் என
திருக்குறள் ஆணித்தரமாக இயம்புவதை கேட்டு நான் வியந்து போனேன். அந்த அளவுக்கு அரசனின் பொறுப்புகளை
வரையறுக்கிறது திருக்குறள்.
மறுமை பற்றி பேசுகிறது
திருக்குறள். ஐம்பொறிகள்
வாயிலாக நாம் சேர்த்து வைக்கும் அறிவு மட்டும் போதாது, அதை கடந்த சத்தியத்தை அறியும் முனைப்பு நமக்கு
வேண்டும்; மனிதனாக
பிறந்த எவரும் இந்த வகையில் உயர வேண்டியது அவரவர் பொறுப்பு.
தவறினால் வாழ்க்கையே
பயனற்றது என்று வலியுறுத்துகிறது
திருக்குறள். அதே
சமயம் வாழ்க்கையை கொண்டாடு என்று திருக்குறள் சொல்கிறது என்றால் அது புலன் இன்பவகை கொண்டாட்டத்தை அல்ல; ஆன்ம நாட்டத்தை. சிற்றுயிரோ, பேருயிரோ அனைத்திடமும் அன்பு செலுத்த வேண்டும்
என்று திருக்குறள் சொல்வது பிரமிப்பூட்டுகிறது. உலகம் முழுவதையும் தன்
குடும்பமாகப் பார்க்கிறார் வள்ளுவர். வாழ்க்கையின்,
முழுமையான வாழ்க்கையின், வழிகாட்டித்
தொகுப்பு, பரிபூரணமான
சமய கையேடு (தர்ம சாஸ்திரம்) திருக்குறள்.
இப்படியெல்லாம்
திருவள்ளுவரின் சிந்தனையை வியந்து போற்றி வந்த நான் அவருடைய சீடன் ஆனேன். தெம்பு
தேடி நான் நாடிய திருவள்ளுவர் எனது
குரு ஆனார். குருவை மறுபேச்சின்றி பின்பற்றுவது சீடனின் கடமை ஆகிறது.
இன்று வைகாசி அனுஷம்.
திருவள்ளுவருக்கு உரிய நாள். இந்த நாளில்தான் திருவள்ளுவர் ஜெயந்தி கொண்டாடப்பட
வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. எனவே
என் குருநாதருக்கு என்னுடைய எளிய காணிக்கையாக இந்த திருநாளை இன்று ஏற்பாடு
செய்தேன். பல்லாயிரக்கணக்கான ஆண்டு தொன்மையானது நம் கலாச்சாரம்; அதற்கு உகந்த விதத்தில் பாரம்பரிய முறையில்தான்
பெரியோர்களின் திருநாளை
கொண்டாட வேண்டும். ஆண்டின் ஒவ்வொரு நாளும் திருக்குறள் நமக்கு வழிகாட்டுகிறது என்றாலும் திருவள்ளுவரை போற்ற இந்த திருநாள்
திருவிழா உதவுகிறது.
திருக்குறளின் பல
மொழிபெயர்ப்புகளை, திருக்குறள்
உரைகளை படித்துப் பார்த்தேன். வள்ளுவரை ஆன்மீக ரீதியாக பார்க்கிறவர்கள்
பக்திபூர்வமாக அணுகுகிறார்கள். திருவள்ளுவர் ஷேக்ஸ்பியர் போன்றவர் என்று ஐரோப்பிய, கிரேக்க ஆசிரியர்களோடு ஒப்பிடும் போக்கும் தென்படுகிறது. மொழிபெயர்ப்புகள்
சொல்லுக்குச் சொல் என்ற ரீதியில் அமைந்து விடுகின்றன. மொழியின் நுணுக்கம் புரியாதது காரணம் எனலாம்.
திருக்குறளை கருத்தியல் ரீதியாக பார்க்கிறவர்களின் உரையோ அவர்களுடைய கருத்தியலை சார்ந்ததாக வள்ளுவத்தை
காட்ட குறளின் சொல்லையே மாற்றுவதையும் பார்க்கிறோம். எல்லாமாக, வள்ளுவம் பற்றி ஒரு தலைப்பட்சமான பார்வைதான்
மிஞ்சுகிறது. திருவள்ளுவர் நம்மையெல்லாம் விட மிகவும் பெரியவர். அவரை
புத்திபூர்வமான ஆணவம் இல்லாமல், ஆரவாரம் செய்யாமல், பணிவுடன்
அடைக்கலம் புக வேண்டும்.
![]() |
| ஓவியர் மணியம் கைவண்ணத்தில் 1956 ஜூன் 5 கல்கி அட்டை ஓவியம் |
தெய்வம் உலகத்துக்கு அளித்த வரம் திருக்குறள். ஆன்மிக பூமியாம் தமிழகத்தில் அமர்ந்து உலகின் தொன்மையான தமிழ் மொழியில் வள்ளுவர் திருக்குறள் ஆக்கியது நமது பெரும் பேறு. குறள்ளின் எண்ணிக்கை அதிகமில்லை 1,330 தான். ஆனால் தொன்மையான கலாச்சார பரிணாம வளர்ச்சி தந்துள்ள தமிழின் மொழிநேர்த்தி திருக்குறளை மகத்தான பொக்கிஷம் ஆக்குகிறது.
நமது பிரதமர் திருக்குறளிடம் அலாதி பிரியம் கொண்டவராக விளங்குகிறார். திருக்குறளின் ஆங்கில / ஹிந்தி பதிப்பு அவரிடம் எப்போதும் இருந்து
வருகிறது. எந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு குறளை பொருத்தமான எடுத்துக்காட்டாக
வழங்க பிரதமர் தவறுவது கிடையாது. அத்தகைய பொருள் வளம் உள்ள திருக்குறளை உலகப் பொது
நூல் ஆக்குவார் என்பது
உறுதி.
நன்றி: 'விஜயபாரதம்'
சென்னை.
----------------------------------------------------
என்னைப் பற்றி…
- v தியாகபூமி, விவேகானந்த கேந்திர பத்ரிகா, இந்தியா டுடே - தமிழ், ஹிந்துஸ்தான் சமாச்சார், த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், விஜயபாரதம் ஆகிய பன்மொழி ஊடகங்களில் ஆசிரியத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்.
- v ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தந்த ஊக்கத்தினால் பாரத தரிசனம், பஞ்சாமிர்தம், மழலைக்கு மரபு ஆகிய பண்புப் பதிவு / கருத்துப் பகிர்வு முயற்சிகளில் தோள் கொடுக்கிறேன்.
- v தமிழ்க் கவிதைகள் ஒரு சில படைத்திருக்கிறேன்.
- v தேசிய ஒருமைப்பாடு, ஹிந்து ஒற்றுமை ஆகிய கருத்துக்கள் கொண்ட ஹிந்தி, ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்திருக்கிறேன்.
- v உரையாடல் உத்தி வழியே ஹிந்தி மொழி / தமிழ் மொழி அறிமுகம் செய்யும் முயற்சி செய்திருக்கிறேன்.
- v எப்போதோ மஞ்சரிக்கும் எப்போதாவது அமுதசுரபிக்கும் எழுதியிருக்கிறேன்.
- v தற்போது விஜயபாரதம், பாஞ்சஜன்ய, ஆர்கனைசர், விக்ரமா உள்ளிட்ட சங்க இதழ்களில் எழுதி வருகிறேன்.



அருமை ஜி. வாழ்த்துக்கள்
ReplyDelete